லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!
பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் பிரித்தானிய விமானத்தில் செல்வதற்கான நுழைவுச் சீட்டை ரகசியமாக வழங்கி, இலங்கையர் ஒருவரை நாட்டை விட்டு கடத்த முயன்றதற்காக புலம்பெயர் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஜனவரி 18 ஆம் திகதி பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் இந்திய காவல்துறையின் காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் சட்டவிரோதமாக லண்டனுக்கு பயணம் செய்த இலங்கையரான ஷருசன் குணசேகரன் என்ற நபர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு சோதனைகள்
மேற்கு லண்டனைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் கந்தையா ராஜகோபால், பிரித்தானியாவுக்குள் நுழைய செல்லுபடியாகும் விசா இல்லாததால் ஷருசன் குணசேகரன் என்ற இலங்கையரிடம் தனது விமான நுழைவுச் சீட்டை கொடுத்துள்ளார்.

இதன்போது, சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த கந்தையா, லண்டனுக்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தை முன்பதிவு செய்திருந்தார், அதே நேரத்தில் ஷருசன் சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தை முன்பதிவு செய்திருந்தார்.
விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இருவரும் முனையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் சந்தித்து விமான பற்றுச்சீட்டுகளை மாற்றிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கந்தையாவின் நுழைவுச் சீட்டை பயன்படுத்தி சாருசன் லண்டனுக்குச் சென்றிருந்தாலும், விமான நிலைய வளாகத்தில் கந்தையா சுமார் எட்டு மணி நேரம் சந்தேகத்திற்கிடமாக இருப்பது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்
குடிவரவு அதிகாரிகள் விசாரித்தபோதும், விமான நிறுவனத்திடமிருந்து வந்த தகவல்களை உறுதிப்படுத்தியபோதும், கந்தையாவின் இருக்கையில் மற்றொரு நபர் பயணம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்போது, சாருசன் லண்டனுக்கு பயணிக்க உதவ திட்டமிட்டதாகவும், பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்புவதற்காக ஒரு நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய அதிகாரிகள் வழங்கிய தகவலின் பேரில், பிரித்தானிய விமான நிலைய அதிகாரிகள் சாருசனை வந்தவுடன் கைது செய்து, இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வரும் கந்தையா, 2012 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |