இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு இராணுவப்பயிற்சி : ஹக்கீம் குற்றச்சாட்டு!
தொழிலாளர்களாக இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (25) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில்
"காசா பகுதியில் மோதல் வெடித்ததில் இருந்து இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே இலங்கையிலிருந்து சென்ற தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கு வைத்தே அவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.
ஹக்கீமின் இந்த குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார அது தொடர்பான தனது கருத்துக்களை பின்வருமாறு தேரிவித்துள்ளார்.
"வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு எந்தவிதமான இராணுவப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை, இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இஸ்ரேலுடனான இலங்கையின் இருதரப்பு உறவைப் பாதிக்கும்.
போலியான குற்றச்சாட்டுகள்
இலங்கையர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று குற்றம் சாட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் இத்தகைய போலியான குற்றச்சாட்டுகள் எதிர்காலத்தில் இரு நாட்டு உறவுகளை வெகுவாகப் பாதிக்கும்.
அதுமாத்திரமல்லாமல், இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கோ அல்லது யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கோ எந்தவொரு பணியாளரும் அனுப்பப்பட மாட்டார்கள், அனைத்து ஊழியர்களும் போரினால் பாதிக்கப்படாத பகுதிகளுக்கே அனுப்பப்படுவார்கள்" என அமைச்சர் தெரிவித்தார்.