மரணப் படுக்கையில் இலங்கை - முக்கூட்டணியால் ஏற்பட்ட நிலை
மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் சென்று நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் இந்த அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வட்டார மட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
முக்கூட்டணி அரசாங்கம்

மேலும் உரையாற்றிய அவர், “மக்கள் வாழ்வை அழிக்கும் ராஜபக்சர்களை காக்கும் யானை அரசாங்கம் தான் நாட்டில் தற்போது ஆட்சியிலுள்ளது.
யானை, காக்கை, மொட்டு ஆகிய முக்கூட்டணி அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் சுருங்கச் செய்து, வரிச்சுமையையும் பொருட்களின் விலையையும் அதிகரித்து பொருளாதாரத்தையும் சீரழித்து மக்களின் வாழ்வையும் நிலைகுலைக்கும் சூழலையே உருவாக்கி வருகிறது.
அரசாங்கம் திருடர்களுடன் டீல் போட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி என்பது திருடர்களுடன் டீல் போடும் கட்சியல்ல. மக்களுடன் மட்டுமே டீல் போடும் அரசியல் கட்சியாகும்.
மௌனமாக இருப்பதா?

பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் கருத்து சுதந்திரத்தை தடை செய்யும் அதிபர், தடியடி கண்ணீர் புகை பிரயோகங்களால் மட்டுமே பதில் வழங்குவார்.
இந்தக் கோழைத்தனமான அரசாங்கத்திற்கு எதிராக மௌனமாக இருப்பதா அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் வீதியில் இறங்கி இந்த முட்டாள்தனமான அரசாங்கத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.