வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல - ஈ.பி.டி.பி. சாடல்
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் (EPDP) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (26.02.2025) நடைபெற்ற வாராந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த நாட்டினிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைவருமே, வரி செலுத்துநர்களாகவே இருக்கின்றோம்.
40,000 ஆயிரம் ரூபாய் வரி
சாதாரண குடும்பம் ஒன்று தங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளின் ஊடாக மாதாந்தம் 40,000 ஆயிரம் ரூபாய் வரியை மறைமுகமாக செலுத்திக் கொண்டிருக்கின்றது.
ஆக, வரவு செலவுத் திட்டத்தில் ஊடாக கிடைக்கின்ற நிதியொதுக்கீட்டை பெற்ற பயன்படுத்துவது என்பது எமது உரிமை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் உண்மையிலேயே. ஒரு வரவு செலவுத் திட்டத்தில், ஒவ்வொரு துறைக்காவும் ஒதுக்கீடுகளிலும் எமக்கான ஒதுக்கீடுகள் காணப்படுகின்றன.
அதைவிட மாகாண சபைக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் சரியான முறையில் எமக்கான ஒதுக்கீடுள் வழங்கப்படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக அவதானித்து அதனை உறுதிப்படுத்துவதே மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாக இருக்க முடியும்.
துறைசார் நிதி ஒதுக்கீடுகள்
ஒருவேளை, எதாவது துறைசார் நிதி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் போது எமது பிரதேசம் புறக்கணிக்கப்படுமாயின் அதுதொடர்பாக எமது ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.
மாறாக, எமது பிரதேசங்களில் அடையாளப்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகளை மாத்திரம் சுட்டிக்காட்டி, மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சிறு பகுதியே எமது மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவதும் அபத்தமானது.
கடந்த காலங்களில் குறுகிய அரசியல் நலன்களுக்காகவும் சுய தேவைகளுக்காகவும் எமது மக்களை உணர்ச்சியூட்டும் வகையில் எம்மவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் எமது மக்களின் இன்றைய கையறு நிலைக்கான காரணங்களில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகள் - கஜந்தன் மற்றும் பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 மணி நேரம் முன்
