ரஷ்ய இராணுவத்திற்கு இலங்கையர்களை அனுப்பிய இருவர் சிக்கினர்
ரஷ்ய இராணுவ சேவைக்கு இலங்கையர்களை அனுப் பும் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் இதனுடன் தொடர்புபட்ட உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இவர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வீசா மூலம் என இலட்சக்கணக்கில் பணமோசடி
சுற்றுலா வீசா மூலம் இலங்கையர்களை ரஷ்ய இராணுவத்தில் சிவில் சேவைக்கு அனுப்புவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா 15 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு ரஷ்ய உக்ரைன் போர் முனைக்கு செல்லும் நிலைக்கு இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த முகவர் நிறுவனம் மேற்கொண்ட மோசடி தொடர்பில் பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி, இந்த முகவர் நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.
இருவர் விசாரணை அதிகாரிகளால் கைது
அதன்படி நேற்று நுகேகொட ஸ்டான்லி திலகரத்ன மாவத்தையில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை சுற்றிவளைத்து அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் என இருவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |