வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்கு சென்ற ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் உயிரிழப்பு
கடந்த 14 வருடங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்ற 4794 இலங்கையர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஊடாக கேட்கப்பட்ட கேள்விக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.
அதிகமானோர் இயற்கை மரணம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றவர்களில் அதிகமானோர் இயற்கை மரணம் எய்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த காலப்பகுதியில் 3242 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கைத்தொழில் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற விபத்துகளால் 428 பேரும், வீதி விபத்துக்களால் 446 பேரும் உயிரிழந்துள்ளதுடன், 377 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 61 இலங்கையர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கொழும்பு, காலி, கம்பகா, கண்டி, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்களை கொண்டுவர ஏற்பட்ட செலவு
இவ்வாறு உயிரிழந்தவர்களின் 3124 உடல்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக 92.8 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், 224 உடல்களை அந்நாடுகளிலேயே நல்லடக்கம் செய்வதற்காகவும் போக்குவரத்துக்கும் 98.26 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2010 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் சென்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த 72,718 பேர் அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் சொந்தமான பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தூதரகங்களில் தஞ்சம்
சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு இல்லங்களில் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டு, பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
மேலும் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் வரையில் 91 இலங்கையர்கள் தொடர்ந்தும் தூதரகங்களிலுள்ள பாதுகாப்பு இல்லங்களிலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
