தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை - கனடா அரசிடம் பறந்த கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
கனடா மறுபரிசீலனை
இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் வலியுறுத்தினார்.

குறிப்பாக, கனடா இவ்விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பில் கல்கரி ஹெரிடேஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உபகுழுவின் உபதலைவருமான சுவலோய் மஜும்தார் (Shuvaloy Majumdar MP).
மற்றும் ஒன்ராறியோ மாகாணத்தின் அரோரா–ஓக் ரிட்ஜஸ்–ரிச்மண்ட் ஹில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ் (Costas Menegakis MP) மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா (Daryna Ostrovska) ஆகியோர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |