நீதிபதி சரவணராஜாவிற்கு நீதி கோரி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் தொடர் நீதிமன்ற பணிபகிஷ்கரிப்பு இன்று (07) ஆறாவது நாளாக இடம்பெற்றுவருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை கொழும்பில் உச்சநீதிமன்றம் முன்பாக இடம்பெற இருக்கின்ற போராட்டத்தை தொடர்ந்தே தமது தொடர் போராட்டம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் ஒன்று நேற்றையதினம்(6) இடம்பெற்றிருந்தது.
பணிப்புறக்கணிப்பு
அக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நேற்று (06) ஐந்தாவது நாளாக பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குருந்தூர்மலை விவகாரத்திலே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி , அழுத்தங்கள் ,துன்புறுத்தல்கள் , உயிர் அச்சுறுத்தல்கள் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டத்திலே இரண்டு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
மாங்குளத்திலே அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றம் சுற்றுலா நீநிமன்றமாக திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாட்கள் அங்கே வழக்குகள் விசாரிக்கின்ற இடமாக செயற்பட்டு வந்திருந்தது.
விசாரணைகள்
தற்போது சட்டத்தரணிகள் மன்றிலே தோன்றாத நிலையில் அத்தகைய நீதிமன்றங்களில் விசாரணைகள் விளக்கங்கள் இடம்பெறுவதில்லை எனவும் சம்பந்தப்பட்ட கட்சியினர் தோன்றியிருப்பின் அவர்கள் தொடர்பானவை மட்டும் மேற்கொள்ளப்படும் எனவும் விளக்கம், விசாரணைகள் தவிர்க்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
சட்டத்தரணிகள் இன்றி நீதிமன்றம் இயங்குவதென்பது அரிதான விடயம்.
எனவே (06) ஆம் திகதி விஷேட கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தோம், அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளின் படி ஏற்கனவே தீர்மானித்ததன் படியும் வருகின்ற திங்கட்கிழமை (09) அன்று கொழும்பில் நீதிமன்ற தொகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள இருக்கின்றோம்.
அதற்கு வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகளும் பங்கு பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நீதிபதிகள்
சிறுபான்மை இனத்தின் நீதி செலுத்துவதில் சிக்கலாக தான் இருக்கிறதே தவிர இது முழு இலங்கைக்கும் பொருத்தமில்லாத ஒன்றாக இருந்தாலும் சிறுபான்மையின நீதிபதிகள் தமிழ் நீதிபதிகள் என விழிக்கப்பட்டு அங்கே பிழையான கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.
இலங்கை ஒரு குடியரசு நாடு, நீதிபதிகள் நீதிபதிகள் தான் அதற்கு தமிழ், சிங்கள நீதிபதி என பிரித்து கூற முடியாது.
இங்கே இருந்த நீதிபதி சரவணராஜா குருந்தூர் மலை தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் , கட்டளைகள் அதனோடு ஒட்டிய விடயங்களை வைத்து நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தலான விடயங்கள் தனிப்பட்ட ரீதியில் விமர்சித்த விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இழைக்கப்பட்ட அநீதி
தமிழ், சிங்கள சட்டத்தரணிகள் அனைவருக்கும் பாதிப்பான விடயமாக அமைந்திருக்கின்றது.
சிங்கள நண்பர்கள் கூட எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இருப்பதாக அறிகின்றோம். இது நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் கருதுகின்றோம்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் இந்த விடயத்தை கொண்டு வர இருக்கிறோம்.
நீதிமன்ற நடவடிக்கையானது திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்ற போராட்டத்தை தொடர்ந்து முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.