மலையக அரசியல்வாதிகளின் கண்களுக்கு எட்டாத ஹட்டன் கல்வி வலைய பாடசாலை - அதிருப்தியில் பெற்றோர்கள்
நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட எல்படை த.வி மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒழுங்கமைந்த கட்டிடங்கள் இன்மையால் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
1931ம் ஆண்டு கட்டப்பட்ட எல்படை தமிழ் வித்தியாலயமானது தற்பொழுது தரம் 11 வரை இயங்குகின்ற போதிலும் இப்பாடசாலைக்கான முறையான கட்டிட வசதி இன்மையால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர் என பாடசாலை அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அதிபர்,
“மழைக்காலங்களில் பாடசாலையின் கூரை ஊடாக மழைநீர் உட்புகுவதனால் கற்றல் உபகரணங்கள் முற்றாக நனைந்து வீணாகும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
குளவி கொட்டு சம்பவம்
இரண்டு கட்டிடங்களை கொண்டுள்ள இப்பாடசாலையில் சுமார் 425 மாணவர்கள் கல்வி கற்றும் வருகின்றனர். ஒரு மண்டபத்தில் 08 வகுப்பறைகளை கொண்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
ஒரே மண்டபத்தில் கூடுதலான மாணவர்கள் கல்வி கற்பதனால் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களால் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
வெயில் காலங்களின் போது பாடசாலை வளாகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றாலும் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரங்களில் பாரிய குளவி கூடுகள் காணப்படுவதனாலும், குளவி கொட்டுக்கு இலக்காகிய சம்பவங்களும் அண்மைக்காலங்களில் பதிவாகியுள்ளன.
மலையக அரசியல்வாதிகளிடம் முறைப்பாடு
இதுவரை காலம் இப்பாடசாலைக்கென எவ்வித சீர்திருத்த பணிகளும் இடம்பெறவில்லை. முறையான வடிகால் வசதிகள் இல்லை. மற்றும் தரைகள் முற்றாக வெடித்த நிலையில் காணப்படுகின்றன.
இப்பாடசாலையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக மலையக அரசியல்வாதிகளிடம் பெற்றோர்கள் பலமுறை முறையிட்ட போதிலும் இதுவரையிலும் எவ்வித மாற்று நடவடிக்கைகளும் அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.
எல்படை தமிழ் வித்தியாலய பாடசாலையின் நலன் கருதியும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டும் நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து இப்பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றினை அமைத்து தருமாறு மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை ஒன்றினை முன் வைக்கின்றனர். ”என தெரிவித்திருந்தார்.