புடின் மறுத்தால்...ட்ரம்ப் எடுக்க இருக்கும் முடிவு: ரஷ்யாவுக்கு காத்திருக்கும் பேரிடி
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மறுத்தால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரித்துள்ளார்.
2022 பெப்ரவரி இல் உக்ரைன் (Ukraine) மீதான படையெடுப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யா (Russia) மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனுக்கான ஆயுத உதவி
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பிரச்சினையையும் தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனை ஆதரிக்க இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உக்ரைன் போரை நிறுத்த தலையிடுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் வலியுறுத்தியதாக ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போருக்கு முடிவு
தொடர்ந்தும் இது தொடர்பில் தெரிவித்துள்ள ட்ரம்ப், “திறமையான ஜனாதிபதி இருந்திருதால் போர் நடந்திருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைனில் ஒருபோதும் போர் நடந்திருக்காது.
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா போருக்கு சென்றிருக்காது. புடினுடன் எனக்கு மிக வலுவான புரிதல் இருந்தது.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதம் அளிக்கப்படுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. புடினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.
அமைதியை விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதியும் என்னிடம் கூறியிருந்தார். இரு தரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்.”என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |