அழிவுப்பாதையில் இலங்கை - எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று இலங்கை அரசிற்கு தேவை எனவும் அரசியல் சூதாட்டங்களை கைவிட்டு நேர்மையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகளவான ஆசிரியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டில் பாரியதொரு பொருளாதார மற்றும் சமூக அழிவு நடைபெற்று வருகின்றது.
விவசாய நிலங்கள்

இந்நேரத்தில் கிட்டத்தட்ட 60,000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை இழந்துள்ளனர்.
வறட்சியின் காரணமாக இலட்சக்கணக்கான ஹெக்டயர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன.
விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமும் கூட இழக்கப்பட்டுள்ளன.
நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

ஏறத்தாழ 5,000 பாடசாலை ஆசிரியர்களும் ஏராளமான மருத்துவ நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனால், மருத்துவமனைகளின் நோயாளர் விடுதிகள் மூடப்பட்டு அறுவைச்சிகிச்சைகள் கூட இடைநிறுத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
இந்நிலையிலிருந்து இலங்கை அரசிற்கு, நாட்டைக் காப்பாற்றுவதற்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம்.
இலங்கை, அரசு விளையாடிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் சூதாட்டங்களை தவிர்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.