உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! களமிறங்கும் சஜித் தரப்பு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளததாக கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சுமத்தி இந்த பிரேரணை முன்வைக்கப்படும் என்று அவர் கூறினார்.
பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகளின் ஆதரவு கோரப்படும் என்று மத்தும பண்டார தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அரசாங்கத்தின் சில உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்காக எரிபொருள் விலை உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பின்-கதவு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வுக்கு கம்மன்பிலயை பகிரங்கமாக குற்றம் சாட்டியவர்களில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எம்.பி. சாகரா கரியவாசமும் ஒருவராவார்.
எனினும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் எரிபொருள் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததாக கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இதேவேளை, எரிபொருள் விலை உயர்வு என்பது நிதி அமைச்சரின் கீழ் வரும் ஒரு விஷயம் என்றும் அவர் கூறியிருந்தார்.