கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா -நோயாளர்களை அனுமதிக்க மறுக்கும் வைத்தியசாலைகள்
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்ற மேலதிக நோயாளர்களை சிகிச்சைக்காக அனுமதிக்க வைத்தியசாலைகள் மறுத்து வருவதாக தென்னிலங்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைத்தியசாலைகளில் நோயாளர்கள் படுக்கைகள் மற்றும் ஒட்சிசனுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதே இதற்கான காரணம் எனறும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகின்ற நிலையில் டெல்டா திரிபின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் அதிகளவிலான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்ற தருணத்தில் புதிய நோயாளர்களை சேர்த்துக் கொள்வதை மேல் மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகள் நிராகரித்து வருவதாக தென்னிலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. நோயாளர்களுக்கான படுக்கைகள் பற்றாக்குறை, ஒட்சிசன் பயன்பாடு அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சீனாவிலிருந்து ஒருதொகை ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ஒன்றரை இலட்சம் ஒட்சிசன் சிலிண்டர்களை சீனாவிலிருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 49 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான இணைப்பதிகாரி மருத்துவர் அன்வர் ஹம்தானி இதனைத் தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 9 பேர் மற்றும் ஒரு தடுப்பூசியை செலுத்தி கொண்ட 40 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு சில நோய்த் தாக்கங்களினால் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளதாக பரிசோதனைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 524 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாதவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.