சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள்
"தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்கள தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுப்போம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையினை சிறிலங்காவின் சுதந்திரநாள் (04.02.2024) அன்று வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது.
தமிழ் மக்களின் உரிமை
உலகின் பல்வேறு நாடுகள் இலங்கைத்தீவில் யுத்தம் நிறுத்தப்பட்டால் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்கான சமரச முயற்சி செய்வதாகக் கூறின. ஆனால் இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை எட்டுகின்ற நிலையில் இலங்கைத்தீவின் இறைமையில் தலையிடமுடியாதென பாராமுகம் காட்டுகின்றன.
எமது இனத்தின் இறைமையினையும் அதன் பாதுகாப்பினையும் உறுதி செய்து எமது சொந்த மண்ணிலேயே உரிமையோடு வாழ வழிசெய்யவேண்டிய தார்மீகப் பொறுப்பினை பிரித்தானியா உட்பட உலகநாடுகளே ஏற்கவேண்டும்.
இலங்கைத்தீவில் நிகழ்ந்த தமிழின அழிப்பிற்கும் யுத்தக் குற்றத்திற்கும் நீதி கோரியும்,நிகழ்ந்துகொண்டிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தக்கோரியும் எமது மக்கள் தொடர்ந்தும் பேரினவாத சிங்கள அரச இயந்திரத்தை எதிர்கொண்டு தன்னெழுச்சியுடன் தாயகத்திலும், புலத்திலும் போராடி வருகின்றனர்.
தமிழரின் தேசிய இனப்பிரச்சினை
இந்தக் காலச் சூழமைவில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களே தாயக விடுதலைக்கான மிகப்பெரும் "அரசியற் சக்தி" என்பதை மனதிற் கொண்டு துணிவுடன் அறவழிப்போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும்.
தேசவிடுதலை நோக்கிய உயரிய பணியை முன்னெடுத்துச்செல்லும் அனைத்து தமிழீழ விடுதலைக்கான ஆதரவு அமைப்புகளோடு அனைத்து மக்களும் இணைந்து தோள் கொடுப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும். தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்கள தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை.
எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுப்போம். எமது தாயகம் விடுதலை பெறும்வரை எமது விடுதலைப்பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்."என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |