மகாசாகர் தொலைநோக்கில் இலங்கை மையப்புள்ளி: கொழும்பில் இந்தியா அழுத்தம்
இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் அண்டை நாடு முதன்மை (Neighbourhood First Policy) கொள்கையிலும், மகாசாகர்" (Mahasagar) தொலைநோக்கிலும் இலங்கைக்கு மையமான பங்கு இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருடன் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
இந்தியாவின் முக்கிய கவனக்குவிப்பு
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நடப்பு ஒத்துழைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முக்கிய முன்னுரிமைத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டன.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வழிகள் ஆராயப்பட்டன.
மேலும் இந்தியாவின் கடல்சார் தொலைநோக்கான மகாசாகர் திட்டத்தை முன்னெடுப்பதில் இலங்கையின் பங்கு முக்கியமானது என விக்ரம் மிஸ்ரி இதன்போது அடிக்கோடிட்டார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என இந்தியா கருதுகிறது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய உயர்மட்ட சந்திப்பு
இன்று காலை நாட்டை வந்தடைந்த வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரியை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
தற்போதைய உயர்மட்ட சந்திப்புகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை முன்னெடுத்துச் செல்வதுமே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு வழங்கும் முதன்மையான முக்கியத்துவத்தையே இந்த சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.