ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களை அச்சுறுத்திய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்- ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்!
ஸ்ரீலங்காவில் ஊடகங்களை அச்சுறுத்திய பெண் காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 8ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பெண் காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்தியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. குறித்த பெண் காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் காவல்துறை உத்தியோகத்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கமராவை தாக்கிய பெண் உத்தியோகத்தர் காவல்துறை பேருந்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.