வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..!
இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தியிருப்பதாக ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தகவலை அவர் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (05.04.2024) நடந்த ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாசை
இது தெடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி மட்டுமல்ல அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜேவிபி அறியாதது அல்ல.
இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் மற்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்துக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க 13 தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் மற்றும் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார்.
அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்காத நிலையில் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.
கூட்டு முயற்சி
இந்நிலையில், அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் மற்றும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜேவிபியினர் கூறுவது அதிபர் தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது.
இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க வடக்கு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை.
அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு கடற்றொழிலாளர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.
மாறாக எடுத்தற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜேவிபி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இறக்குமதி
இந்திய பருப்பை உண்ண மாட்டோம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம் மற்றும் தீவுப் பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜேவிபியினர்.
ஆனால் அதிபர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதிகாத்து வருகின்றனர்.
அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜேவிபி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |