மேலும் வாய்ப்புகளை வழங்குங்கள்- கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை!
கொழும்பு துறைமுக நகரில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குவைத் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையர்கள் பலர் குவைத்தில் பணியாற்றுவதாகச் சுட்டிக்காட்டிய கோட்டாபய பயிற்சிபெற்ற தொழிற்படையினருக்கு மேலும் பல வாய்ப்புகளைத் திறந்துவிடுமாறு குவைத் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக நீங்கிய பின்னர், இரு தரப்புகளுக்கிடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், துறைமுக நகரம் சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் குவைத் அரசாங்கத்தால் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் குவைத் பிரதமருக்கு கோட்டாபய எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அரச தலைவரின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
