ரணில் குறித்து கோட்டாபயவிடம் இந்தியா சொன்ன இரகசியம்! காலம் கடந்து வெளியான தகவல்
“ரணில் விக்ரமசிங்கவை அதிபராக நியமிக்க வேண்டாம் என இந்தியா தன்னிடம் வலியுறுத்தியதாக” முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோபூர்வ இல்லத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் உரையாடும் போது முன்னாள் அதிபர் இந்த விசேட தகவலை வெளியிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் பெரிய கோரிக்கை
“ நான் மாலைதீவில் இருந்த போது ரணிலை அதிபராக நியமிக்க வேண்டாம் என இந்தியா என்னிடம் பெரிய கோரிக்கையை விடு்த்தது.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் இணங்கியது போல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை அதிபராக நியமிக்குமாறு இந்தியா என்னிடம் கோரியது.
எனினும் ரணிலை அதிபராக நியமிக்குமாறு எனக்கு பல தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ரணிலை அதிபராக நியமிக்குமாறு எம்மவர்களே என்னிடம் வந்து கூறினர்.
எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக நான் அதிபர் பதவியை ரணிலுக்கு வழங்கினேன்.
இதன் காரணமாக இந்தியா என் மீது கோபம் கொண்டிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்” என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் வெளியேற்றம்
எவ்வாறெனினும், நாட்டில் வெடித்த மக்கள் புரட்சி காரணமாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை, பதில் அதிபராக நியமித்து விட்டு நாட்டில் இருந்து வெளியேறினார்.
கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன், அதன் பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று அதிபராக தெரிவானார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் அமர்த்திய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவில் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
