பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தான் அதிபர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் தனது முடிவினை அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான அறிவித்தலை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு கோட்டாபய அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இதேவேளை, சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ விலகியுள்ளதை மாலைதீவின் சபாநாயகரும் முன்னாள் அதிபருமான மொஹமட் நஷீட் உறுதி செய்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் பதவி விலகியுள்ள நிலையில், இலங்கையால் தற்போது முன்னோக்கி நகர முடியும் என தாம் நம்புவதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்திருந்தால், தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக அவர் பதவி இருந்து விலகாமல் இருந்திருக்கலாம் எனவும் மொஹமட் நஷீட் மேலும் கூறியுள்ளார்.
மாலைதீவு அரசாங்கம் சிந்தித்து மேற்கொண்ட நடவடிக்கையை தாம் பாராட்டுவதாக கூறியுள்ள மொஹமட் நஷீட் இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
