மைத்திரி தரப்பு வகுக்கும் வியூகம்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சினை காரணமாக அக்கட்சியைக் கைப்பற்றுவதற்கு மூன்று தரப்பினர் களத்தில் இறங்கியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தலைமையிலான குழு, மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையிலான குழு மற்றும் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தலைமையிலான குழு போன்றன இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த அமரவீர (Mahinda Amaraweera), துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) மற்றும் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) ஆகியோர் அரசோடு இணைந்து நிற்பதன் காரணமாக அவர்கள் மூவரையும் சு.கவில் வகித்த பதவிகளில் இருந்து மைத்திரிபால சிறிசேன நீக்கினார். இதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றம் சென்றனர்.
மைத்திரிக்கு தடை
மைத்திரிபால கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அவர்கள் மூவரும் சந்திரிகாவின் விசுவாசிகள். சந்திரிக்காவே கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று அவர்கள் பாடுபடுகின்றார்கள்.
அதேபோல், சு.கவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மைத்திரியால் நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி கட்சிக்குள் இருக்கும் அவரது விசுவாசிகளுடன் இணைந்துகொண்டு கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று அறியமுடிகின்றது.
மாற்று வியூகம்
நீதிமன்றத் தடை நீங்கியதும் மைத்திரியே மீண்டும் தலைவராக வருவார். அந்தத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மைத்திரி தரப்பு வியூகம் வகுத்து வருவதையும் அறியமுடிகின்றது.
இவ்வாறு மூன்று தரப்பினர் சு.கவைக் கைப்பற்றுவதற்குக் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையைக் காண முடிகின்றது.
நீதிமன்றத் தடை நடைமுறையில் இருப்பதால் மேற்படி மூன்று தரப்புக்களில் சந்திரிக்கா அணி, சு.கவின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva) நியமித்துள்ளது.
அதேவேளை, மைத்திரி அணி, சு.கவின் பதில் தலைவராக விஜேதாஸ ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) நியமித்துள்ளது. பதில் தலைவர் நியமனங்களால் சு.க. பிளவு அணிகளுக்குள் முரண்பாடு வலுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |