இந்தோனேசியாவிற்கான விமான சேவைகளை இரத்து செய்த சிறிலங்கன் எயார்லைன்ஸ்
கொழும்பு மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா இடையிலான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய விமானச் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் 'அனக் கிரக்கடோவா' எரிமலையிலிருந்து பரவும் ஆபத்தான சாம்பல் புகைக் கூட்டங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கொழும்பில் இருந்து ஜாகர்த்தா செல்லும் UL 364 மற்றும் ஜாகர்த்தாவில் இருந்து கொழும்பு திரும்பும் UL 365 ஆகிய இரு விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
அனக் கிரக்கடோவாவிலிருந்து சிலிக்கா துகள்கள் மற்றும் பாறை இடிபாடுகளுடன் கூடிய அடர்ந்த சாம்பல் புகை பரவியதால், ஜகார்த்தாவின் சுகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயற்பாடுகளை இந்தோனேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

காற்றில் மிதக்கும் இந்த சாம்பல் துகள்கள் விமான எஞ்சின்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால், இலங்கை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதையிலும் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (06) இரவு அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரு சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையே சேவைகளை நடத்தும் பல மேற்காசிய விமான நிறுவனங்களும் தங்களது பயணப் பாதைகளை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |