சிறிலங்கன் விமான சேவை விவகாரம் : கட்டுநாயக்கவிற்கு விஜயம் செய்த விஜித ஹேரத்
அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு (Bandaranaike International Airport) கண்காணிப்பு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கன் விமான (Sri lankan Airlines) சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் இன்று (11) விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் பிரிவு ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விசேட பிரிவு அமைக்கப்படுதல்
அத்துடன் விமானம் தாமதம் ஏற்படுவது தொடர்பில் 24 மணி நேரமும் பயணிகளுக்கு உடனடித் தகவல்களை வழங்கவும், தாமத காலத்தில் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கவும் விமான நிலையம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவு ஒன்று விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த காலதாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை அமைச்சர் விஜித ஹேரத் துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த 7ம் திகதி துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |