பாக்கு நீரிணையைக் கடந்து சாதனை படைத்த இலங்கைத் தமிழனுக்கு பாராட்டு விழா!
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த இளைஞனுக்கு பாராட்டு விழா இடம்பெற்றுள்ளது.
தவேந்திரன் மதுஷிகன் என்ற இளைஞனே குறித்த சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் அதிபர் விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமாவார்.
கடந்த புதன் கிழமையன்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு
இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையை நீந்தி தலைமன்னாரை வந்தடைந்து சாதனை படைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய சாதனையாளராகவும் மதுஷிகன் பாராட்டப்பட்டார்.
மதுஷிகனிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் நினைவுச்சின்னம் மற்றும் நிதி அன்பளிப்பு என்பன வழங்கி கௌரவமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதிபர் சாரணிய விருது
30 கிலோ மீற்றர் தூரமான பாக்கு நீரிணையை ஏறத்தாழ 12 மணித்தியாலம் 58 நிமிடங்களில் நீந்திக் கரை சேர்ந்த மதுஷிகன் இதுவரையில் தனது நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றுள்ளார், இவருடைய சாதனைப்பயணம் இன்னும் பல தூரம் தாண்டி செல்ல வேண்டும் என்று அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
மதுஷிகன் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் கல்வி கற்றது மாத்திரமல்லாமல் சாரணியப் படையில் இணைந்து தனது திறமைகளினை வெளிப்படுத்தி அதிபர் சாரணிய விருதினையும் பெற்றுள்ளார் என்பது சிறப்பான விடயமாகும்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)