தண்டம் விதித்த காவல்துறை - பாகங்களை உடைத்தெறிந்த சாரதி: தமிழர் பகுதியில் சம்பவம்
வவுனியாவில் (Vavuniya) க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (07.02.2025) வவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தண்ட குற்றப் பத்திரம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறையினர் தெரித்துள்ளதுடன், அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கியிருந்தனர்.
அந்தவகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் கிளீன் சிறீலங்கா திட்டத்தினை வவுனியா போக்குவரத்துப் காவல்துறையினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, அப்பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்த காவல்துறையினர் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்துடன், தண்ட குற்றப் பத்திரத்தையும் வழங்கியிருந்தனர்.
சாரதியின் செயற்பாட்டை வேடிக்கை
இதனால் அதிருப்தி அடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி காவல்துறையினரின் முன்னிலையிலேயே குறித்த உதிரிப்பாகங்களை காலால் அடித்து உடைத்துள்ளார்.
அத்துடன், ஏனைய பாகங்களையும் கழற்றி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சாரதியின் செயற்பாட்டை வேடிக்கை பார்த்த காவல்துறையினர் அமைதியாக அங்கிருந்து சென்றிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |