250 மில்லியன் டொலர்களை ஏற்க மறுத்த இலங்கை பிரதிநிதிகள்
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல்லுக்கு நிர்ணயித்த 5 ஆயிரம் கோடி ரூபாயை இலங்கை பிரதிநிதிகள் ஏற்க மறுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ( Lohan Ratwatte) தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்தின் பிரபல மாணிக்கக்கல் ஏலவிற்பனை நிறுவனம் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயம் செய்துள்ளது.
இந்த விலையானது இலங்கை ரூபாயின் பெறுமதியில் 5 ஆயிரம் கோடி ரூபாய். எனினும் குறித்த மாணிக்கக் கல்லின் உரிமையாளர் மற்றும் மாணிக்கல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபையின் பிரதிநிதிகள் இதற்கு இணங்கவில்லை.
இந்த மாணிக்ககல்லுக்கு இலங்கை பிரதிநிதிகள் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் கிடைத்த 510 கிலோ கிராம் எடை கொண்ட இந்த கல், நீல மாணிக்கக் கற்களை கொண்ட கொத்து என்பது குறிப்பிடத்தக்கது.
