இலங்கை பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சி - ரணில் பகிரங்க அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பான வழி என பிரதமர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, இலங்கை தற்போது எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் முற்றுமுழுதான வீழ்ச்சி
இலங்கையின் பொருளாதாரம் முற்றுமுழுதான வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதுவே தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முதலில் அந்நிய கையிருப்பு நெருக்கடியை அரசாங்கம் தீர்க்க வேண்டும் எனவும்,
இந்திய கடன் வசதியின் கீழ் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் பெற்ற போதிலும், இந்தியாவிடம் இருந்து புதிய உதவியை கோரியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி, திறைசேரி, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கலந்துரையாடல்களை நிறைவுசெய்துள்ளதாகவும், பொது நிதி, நிதி, கடன் நிலைத்தன்மை, வங்கித்துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு போன்ற பல்வேறு துறைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் கூறினார்.
கடனை மறுசீரமைக்கும் முயற்சி
கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் அரசாங்கத்திற்கு உதவும் வகையில் நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான Lazard மற்றும் Clifford Chance இன் பிரதிநிதிகளும் இலங்கையில் இருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வரவிருக்கும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையான பின்னணியை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Lazard மற்றும் Clifford Chance ஆகியோரின் ஆதரவுடன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.