பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆரம்பமாகவுள்ள புதிய முறைமை
உறுதிமொழி சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க மாட்டோம் என்றும் பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்த மாட்டோம் என்று சான்றிதழில் கையொப்பம் பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரத்தில் சித்தியடைந்த பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உரிமையின் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மேலும், இது ஒரு சுமூக உடன்படிக்கை என்றும், ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அதேவேளை, பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாகவும், அதன்படி 4 வருடங்கள் கல்வி கற்று பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்காக அரசாங்கம் 32 இலட்சம் ரூபா பாரிய தொகையை 4 வருடங்களுக்கு செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டிள்ளார்
