தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்
ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்ப்பதாக தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் நேற்று (15) நடைபெற்ற குமுதினிப் படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், வலிசுமந்த நெடுந்தீவு மண்ணிலிருந்து, கனேடியப் பிரதமருக்கும் பிரம்டன் நகர மேயருக்கும் எனது நன்றிகளைப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலையின் சாட்சியம்
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “குமுதினிப் படகில், குருநகர் கடலில், கொக்கட்டிச்சோலையில், சத்துருக்கொண்டானில், வாகரையில், நவாலியில், நாகர்கோயிலில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை கொத்துக்கொத்தாக எங்களை கொன்றொழித்துவிட்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறவே இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும், நாமல் ராஜபக்சவும், அலி சப்ரியும் தெரிவித்துள்ள கருத்துகள் உலகத்தின் மனசாட்சியை உலுக்கத்தக்க, சிங்கள வல்லாதிக்க வெளிப்பாட்டுக்குரியவை.
அத்தகைய கருத்துகளை முன்வைத்தோருக்கு எதிராக நான் எனது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
இத்தகைய இனவாதம் கொப்பளிக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான சர்வதேச சாட்சியமாக, பிரம்டனில் இனப்படுகொலை நினைவுத்தூபியை நிறுவிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி, பிரம்டன் நகர மேயர் பெட்ரிக் பிரவுண் ஆகியோரோடு, இதற்கு காரணமான அனைவருக்கும் எமது நன்றிகள்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
