காலிமுகத்திடல் போராட்டம் - மேலும் இரண்டு செயற்பாட்டாளர்கள் கைது
சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் கைது
சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் செயற்பாட்டாளர் இன்று காலை நீர்கொழும்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக சோசலிச மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொழும்பு கோட்டை காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டதாக ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்த மற்றுமொருவர் கைது
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த இரண்டாவது நபரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க, காலி முகத்திடல் போராட்டக்காரர் டேனிஷ் அலியுடன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க இன்று கறுவாத்தோட்ட காவல்துறையில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

