இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள பணியாளர் வெற்றிடங்கள் : வெளியான தகவல்
இலங்கையின் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக 7,418 பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 25 வீதமாகும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
நாட்டின் உயர்கல்வித் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிலை குறித்து, ஊடகமொன்றின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சில தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகங்களில் நிரந்தர கல்விசார் பணியாளர் பதவிகளுக்காக 9,332 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 6,946 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக 2,048 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன.
கற்பித்தல் தரத்தைப் பாதித்தல்
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நிலவும் நிரந்தரக் கல்விசார் பணியாளர் வெற்றிடங்கள் கற்பித்தல் தரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரிவில் 3,742 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,186 பேர் பணியில் உள்ளனர், இங்கு 725 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
நூலகர், தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவியாளர்கள் உள்ளிட்ட பிரிவில் 16,351 பணியாளர் இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது 11,875 பேர் மட்டுமே பணியில் இருப்பதால், இப்பிரிவில் மாத்திரம் 4,476 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
வெளிநாடுகளுக்குச் சென்றனர்
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஓகஸ்ட் வரையிலான குறுகிய காலப்பகுதியில் மட்டும் 566 நிரந்தர விரிவுரையாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாானோர் வெளிநாடுகளுக்குச் சென்றமை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக கடந்த வருடம் அரசாங்கம் 1,209 கல்விசார் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்கள் தமது நிதி ஒதுக்கீட்டிற்குள் இருந்து தேவையான புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வழிகாட்டல்களையும் பிரதமர் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |