இராஜாங்க அமைச்சர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள கடும் தீர்மானம்
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாடு சென்ற எத்தனோல் வியாபாரி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் முனையம் ஊடாக அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வர்த்தகர் காவல்துறையினரால் கைது செய்யப்படவிருந்த போது நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், பின்னர் அரசியல்வாதி ஊடாக காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவையுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க அரச தலைவர் தீர்மானித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புலனாய்வு அறிக்கையை கோருவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் அரச தலைவரும் பிரதமரும் கலந்துரையாடி கடும் தீர்மானமொன்றை எடுப்பார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
