நாடு முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்
நாடளாவிய ரீதியில் அனைத்து பணிகளில் இருந்தும் விலகி, தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இன்னும் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறியுள்ளது. அதனால் எதிர்வரும் 26ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன (Sumedha Somaratne) தெரிவித்தார்.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தமை காரணமாக, தங்களது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில கோரிக்கைகளை முன்வைத்து, பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டு விநியோகத்தை தவிர்த்தல் முதலான தொழிற்சங்க நடவடிக்கையில் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.