08 மாத குழந்தையுடன் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்
முறைகேடான கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது எட்டு மாத மகளுடன் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறை விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல உப முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
அஹுங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காணொளியை எடுத்து மிரட்டிய முன்னாள் காவல்துறை அதிகாரி
கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவருடன் இவர் முறைகேடான உறவில் இருந்துள்ளார், அந்த முன்னாள் காவல்துறை அதிகாரி இவர் தன்னுடன் இருந்த பொழுதுகளை காணொளியாக எடுத்துள்ளார். இவ்வாறு எடுத்த காணொளிகளை அவரது கணவனுக்கு அனுப்பி வைப்பதாக மிரட்டி, பணம் பறித்துள்ளார்.
இதன்படி இதுவரை சுமார் நான்கு இலட்சத்தை பெற்றுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மிரட்டி கப்பம்
இன்று (28) மதியம் அவர் அறுபதாயிரம் ரூபாவை கேட்டதாகவும் அதனை கொடுக்க முடியாத நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதம் முன் குதிக்க முயற்சித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
பெண்ணுடன் முறைசாரா உறவைப் பேணி அவருடன் அறையில் கழித்த தருணங்களை பதிவு செய்த முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஹுங்கல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அஹுங்கல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |