மக்களை அடக்கி ஆள்வதை நிறுத்துங்கள் - ரணிலுக்கு கடும் எச்சரிக்கை
கைது செய்வதை உடன் நிறுத்துங்கள்
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க உண்மையான விருப்பம் இருந்தால், பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செயற்பாட்டாளர்களை கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமென கலாநிதி ஓமல்பே சோபித தேரர் அதிபர் ரணிலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசியல் ஸ்திரத்தன்மை தேவை. அப்படி ஒரு சூழலை நாட்டில் உருவாக்கினால் தான் சர்வதேச உதவி கிடைக்கும். சர்வகட்சி ஆட்சிக்கு அனைத்து தரப்பினரையும் அழைக்கும் அதிபர் மறுபுறம் செயற்பாட்டாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை அடக்கி ஆள்கிறார்.
எரியும் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு
நாட்டின் பிரச்சினைகளை அடக்கி ஒடுக்கி தீர்ப்பதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து சர்வகட்சி ஆட்சியை உருவாக்கி நாட்டின் எரியும் பிரச்சினைகளை முதலில் தீர்த்து பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அதிபர் நேர்மையான நடவடிக்கை எடுத்தால், மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை முதலில் கைவிடவேண்டும்.
ஒருபுறம் அனைத்துக் கட்சி அரசு அமைக்க அழைத்துவிட்டு , மறுபுறம் செயல்பாட்டாளர்களை ஒடுக்குவது தவறு. இப்படிச் செய்தால் அது பொய்யாகவும் மக்களைத் தவறாக வழிநடத்தும் ஏமாற்றுச் செயலாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
