முல்லைத்தீவில் மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் - சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை வைத்திய பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவிகள்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற போது சந்தேக நபர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் சட்டத்தரணி கௌதமன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயனும் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த ஆசிரியர் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
இதனையடுத்து குறித்த ஆசிரியரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவனை ஐந்து இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
மேலும் ஆசிரியருக்கு பாலியல் சார்ந்த நோய்கள் உள்ளனவா என்பது தொடர்பில் பரிசீலிக்குமாறும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் காவல்துறையினர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
