பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முயன்ற மாணவனுக்கு நிகழ்ந்த துயரம்
பாடசாலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் பதினொரு வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.
கட்டுபொத - மூனமல்தெனிய பிரதான வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பேருந்தின் பின் வாசல் வழியாக இறங்கிய மாணவன்
பேருந்து நிறுத்தப்பட்டதும், பல மாணவர்கள் பேருந்தின் முன் வாசல் வழியாக இறங்கினர், ஆனால் இந்த மாணவர் பேருந்தின் பின் வாசல் வழியாக இறங்கியுள்ளார்.
பேருந்து கட்டுபொதவில் இருந்து மூனமல்தெனிய நோக்கியும், சிறிய லொறி மூனமல்தெனியவிலிருந்து கட்டுபொத்த நோக்கியும் சென்று கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சாலையை கடக்க முன்னோக்கி சென்றபோது
பேருந்தில் இருந்து இறங்கிய மாணவன் சாலையை கடக்க முன்னோக்கி சென்றபோது, குறித்த சிறிய லொறி சிறுவனை மோதி தள்ளியுள்ளது. விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் தராவா குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும்,மாணவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.
குளியாபிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட மொரகனே மகா வித்தியாலயத்தில் ஆறாம் (6) தரத்தில் கல்வி கற்கும் அனுக்கன்ஹேன மகுலகமவைச் சேர்ந்த ஐ.எச்.ஹிமாஷா இடுனில் என்ற பதினொரு வயது மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற லொறியின் சாரதி தமுனுவ, மொரகனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சாரதியும் வாகனமும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
