தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (The National Hospital of Sri Lanka) நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன (Rukshan Bellana) தெரிவித்துள்ளார்.
மேலும், சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் காய்கறிகள் ஓரளவு அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேநீருக்கு பயன்படுத்தப்படும் மாவு மற்றும் சீனியும் காலாவதியாகவும் காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு முடிவெடுத்தல்
உணவுக்கு வழங்கப்படும் மீன் பரா மீனாக இருக்க வேண்டும், ஆனால் சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் உணவுக்கு தகுதியற்ற மீன்களுடன் உணவை வழங்குகின்றன எனவும் கூறினார்.
இது குறித்து பல ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது எனவும் வைத்தியர் பெல்லன தெரிவித்துள்ளார்.
உலர் உணவுக்காக 76 மில்லியன்
இந்த உணவை வழங்கும் ஒப்பந்த நிறுவனம் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள் போன்ற அரச நிறுவனங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதாகவும், இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு பல தடவைகள் அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த நிறுவனத்திற்கு உலர் உணவுக்காக மாதாந்தம் 76 மில்லியனும் மீனுக்காக 15 மில்லியனும் வழங்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லான மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |