காவல்துறை உத்தியோத்தரின் முன்மாதிரி : இந்திய சுற்றுலா பெண் நெகிழ்ச்சி
காலியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்தின் சொகுசு பெட்டியில் பயணித்த 24 வயதான இந்தியப் பெண் ஒருவர் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினி மற்றும் அதன் பாகங்கள் அடங்கிய பையை விட்டுச் சென்ற நிலையில் அதனை கண்டெடுத்த காவல்துறை உத்தியோகத்தர் அதனை உரியவரிடம் சேர்த்துள்ளார்.
மாளிகாவத்தை தொடருந்து காவலர் அலுவலகத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் கபில மாரசிங்க (91075) என்பவரே இந்த முன்மாதிரியான செயலைச் செய்தவராவர்.
தொடருந்தில் தவறவிடப்பட்ட ‘சூட்கேஸ்’
காலியில் இருந்து மாளிகாவத்தை சென்ற தொடருந்து மாளிகாவத்தை தொடருந்து நிலையத்திற்கு வரும்போது கடமையில் ஈடுபட்டிருந்த சார்ஜன்ட் மார சிங்க, பெட்டியொன்றில் இருந்த ஒரு பையை கொண்டு வந்து மாளிகாவத்தை தொடருந்து பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் நந்தன பெரேராவிடம் கையளித்துள்ளார்.
இந்தியப் பெண் பையைத் தேடி வந்தநிலையில், அது அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய யுவதியின் நன்றி
இந்த பையை தன்னிடம் ஒப்படைத்ததற்காக இந்திய யுவதி சார்ஜன்ட் மாரசிங்கவுக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், மடிக்கணினி உள்ளிட்ட பாகங்கள் கொண்ட இந்த பையை மீண்டும் கண்டுபிடிப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் தொடருந்து பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |