அலி சப்ரியின் கண்டனத்திற்கு சுமந்திரன் பதிலடி..!
"பொறுப்புக்கூறல் விவகாரத்தை பொறுத்தமட்டில் இதுவரையில் இலங்கை அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கை நடுநிலையுடன் இருக்கவேண்டுமானால், அது சர்வதேச பொறிமுறையாக அமையவேண்டியது அவசியம்."
இவ்வாறு, தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அலி சப்ரி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழினப் படுகொலை தொடர்பில் வெளியிட்ட கருத்தை கடுமையாக கண்டித்து நிராகரிப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதாவது, எவ்வித ஆதாரங்களுமின்றி முன்வைக்கப்படும் 'இனப்படுகொலை' தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களின் இன நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் பதிலடி
"யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கடந்த 14 வருடங்களில் அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
காலந்தாழ்த்திவிட்டு, குறித்த விடயத்தை ஏனைய சர்வதேச நாடுகள் வலியுறுத்திக் கூறியவுடன் கோபப்படுவதில் எந்தவித அர்த்தமுமில்லை.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று.
கனடா மட்டுமல்ல ஏனைய சர்வதேச நாடுகளும் இவ்விடயத்தை வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பில் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச சமூகம் நிச்சயமாக அழுத்தங்களை பிரயோகிக்கும்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
