தமிழர் காணி குறித்த அரச வர்த்தமானி: வழக்கை மீள பெற்ற சுமந்திரன்
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணிகளை உரிமைகோரா விட்டால் அரச காணிகளாக மாற்றுவது தொடர்பில் வெளியான வர்த்தமானியை அரசு திரும்ப பெற்றுள்ளது.
இந்தநிலையில், அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) நேற்று (03) உயர்நீதிமன்றத்தில் விலக்கிக் கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரான சுமந்திரனுக்கு உள்ள உரித்துகளைக் கைவிடாமல் வழக்கை திரும்ப பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது.
வழக்கு விசாரணை
நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, அர்ஜுனா ஒபயோசேகர மற்றும் மேனக விஜயசுந்தர ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த அனுமதியை அளித்தது.
இந்த வழக்கை மனுதாரர் தரப்பில் முன்னின்று வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரன் நேற்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்துக்குச் சமுகம் அளித்திருக்கவில்லை.
முன்னிலையான சட்டத்தரணி
சுகவீனம் காரணமாக அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி லக்ஷ்மணன் ஜெயக்குமார் மன்றில் தெரிவித்தமையோடு, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அதற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், உரிய சமயத்தில் இடைக்காலத் தடை உத்தரவையும் விதித்த நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் நேரில் பிரசன்னமாகி நேற்று நன்றி தெரிவிக்க விரும்பினாராயினும், அவர் சுகவீனம் காரணமாக நேற்று மன்றுக்கு வரவில்லை என்றும், தமது நன்றியை நீதிமன்றில் பதிவு செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் சட்டத்தரணி லக்ஷ்மணன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுரேகா அஹமத் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
