உரிமம் இடைநிறுத்தப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்! அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை
தரக்குறைவான பூச்சிகொல்லி மருந்துகளை வழங்கும் நிறுவனங்களின் உரிமம் இரத்துச் செய்யப்பட்டு அந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிற்கு வழங்கப்படும் பூச்சிகொல்லி மருந்துகள் தரமானவையாக இருக்க வேண்டும் எனவும் அதன் தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனங்களிற்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கைத் தேசிய விவசாயிகள் அமைப்புகளின் மாவட்டத் தலைவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து அமைச்சரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயர்தர பூச்சிக்கொல்லி
சில நிறுவனங்கள் தரமானவை எனக்கூறப்பட்டு அதிக விலைக்கு கொடுக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், களை கட்டுப்பாடு மற்றும் பூச்சி கட்டுப்பாடு மருந்துகள் போன்றவை சரியான பலனை தருவதில்லை என்றும் அவை தரக்குறைவானவை என்றும் அவர்கள் அமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
ஏதேனும் ஒரு நிறுவனத்தால் விற்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரம் குறைவாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக விவசாய அமைச்சகம், விவசாயத்துறை மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டுச் செயலகத்துக்குத் தெரியப்படுத்துமாறு விவசாயிகளுக்கும், விவசாய அமைப்புகளிற்கும் இதன் போது அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதற்கு மாற்றீடாக விவசாய சேவை நிலையங்களில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை விநியோகிக்கும் முறையினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் வாயிலாக விவசாயிகளுக்கு விவசாய சேவை நிலையங்களில் இருந்து உயர்தர பூச்சிக்கொல்லி மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.