சலேவின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
அதன்போது, சலேவுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர் மீதான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகரவை விடுத்து வேறு ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கோரி, இன்று (26) நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தனர்.
அதன்படி, அந்த விடயத்தில் உள்ள உண்மைகளைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடங்கியதில் இருந்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர விசாரணையை நடத்தி வருவதால், அவரை விசாரணையிலிருந்து நீக்குவதற்கான உத்தரவு பெரும் சிக்கலாக அமையும் என்று சுட்டிக்காட்டி, அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க மறுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அதனைதொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தபோது, நீர்கொழும்பில் உள்ள வழிபாட்டுத் தலங்களைக் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், நீதிமன்றத்தில் சாட்சியமளித்த ஒரு சாட்சியின் இல்லத்திற்குப் சுரேஷ் சாலேவின் புலனாய்வு அமைப்புகள் சென்றிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னர், இந்த வழக்கு ஏப்ரல் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபரான சுரேஷ் சலே உட்பட அனைத்து சந்தேக நபர்களையும் அந்த திகதியில் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |