யாழில் கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார்.
அப்பெண் தனிமையிலிருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர், அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், கொலை நடந்த வீட்டிற்கு அருகிலிருந்த சி.சி.ரி. வி காணொளிகள் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
காணொளியில் கொலை சந்தேகநபர் துவிச்சக்கர வண்டியில் தப்பிச் செல்லும் காட்சியின் அடிப்படையில் விசாரணைகளைத் துரிதப்படுத்தி இருந்த பொலிஸார் யாழ்ப்பாணம் முலவை எனும் பகுதியில் வைத்து சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார்
தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.