வவுனியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்! தேடுதல் தீவிரம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் தப்பி ஓடியதையடுத்து, அவரை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தாெடர்பில் கடந்த 26.01.2024 அன்று நெளுக்குளம் காவல்துறையினரால் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக
இதனை தொடர்ந்து வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த இளைஞன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 29.01.2024 அன்று சிறைச்சாலையில், சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை தேடும் நடவடிக்கை
இதன்போதே அவர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை வவுனியா காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |