மன்னாரில் வெடித்த போராட்டம்: மாக்கஸ் அடிகளார் உள்ளிட்ட 6 பேருக்கு பிணை!
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் உள்ளடங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மக்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வர வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்று (01.10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில், குறித்த நபர்கள் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஊடாக இன்றைய தினம் (01.10) நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேகநபர்களையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்குப் பதிவு
குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்த மூவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிராகவும் காவல்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன்போது குறித்த மூவரும் சனிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த மூவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்