மசாலா பொருட்களின் இறக்குமதிக்கான அனுமதி இடைநிறுத்தம்
இலங்கையிலிருந்து மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
குறிப்பாக மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனை திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்நாட்டு வாசனைப் பொருள் விவசாயிகளை ஊக்கமிழக்க செய்வதாகவும் அதனால் உள்நாட்டு வாசனை பொருட்களின் சாகுபடி வீழ்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த அமரவீர சுட்டிக்காட்டு
இதேவேளை தற்போது உலகின் சிறந்த வாசனைப் பொருட்கள் வர்த்தகநாமங்களில் முதலிடம் வகிக்கும் இலங்கையின் வாசனைப் பொருட்களின் தரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அதிபர் தலைமையிலான அமைச்சரவை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு மீள் ஏற்றுமதிக்காக வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்ததாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.
உள்நாட்டு வாசனைப் பொருட்களின் தரத்தை மேலும் பேணுவதற்கும், தோட்டப் பயிர்களாக உள்நாட்டு வாசனைப் பொருட்களை மேலும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து நீண்ட ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |