யாழ் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய ஏழாம் திருவிழா பிரச்சினை - பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின், ஏழாம் திருவிழா தொடர்பில் ,உரிய நீதி கிடைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்ததாவது,
சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில், ஏழாம் திருவிழா பல ஆண்டுகளாக ,சுதுமலை தெற்கு யுவசக்தி சனசமூக நிலையத்தின் எல்லைக்குட்பட்ட, பொது மக்களின் திருவிழாவாக காணபட்டது.
தனிப்பட்ட சில நபர்கள்
திருவிழாவுக்கான கட்டுப் பணம் மற்றும், திருவிழா சார்ந்த செலவுகளுக்கான பணம்ஆகியவை, பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, பல ஆண்டுகள் திருவிழா நடாத்தப்பட்டது.
அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமை காரணமாக, திருவிழா கைவிடப்பட்டது. பின்னர் மீண்டும் வருடாந்த பெருந்திவிழா நடைபெற்ற வேளை, எமது ஊரைச் சேர்ந்த சிலர் தலைமை வகித்து, பொது மக்களின் திருவிழா என்ற அடிப்படையில் திருவிழாவை சில காலம் நடாத்திவந்தனர்.
பின்னர் தற்போது தனிப்பட்ட சில நபர்கள் பொறுப்பு நின்று, ஊரில் உள்ள சிலரிடம் பணம் சேகரித்து, திருவிழாவை ,தம்முடையது என உரிமை கொண்டாடுகின்றனர்.
இதனை நாம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்,மற்றும் ஆலய நிர்வாகத்துக்கும் பல வருடங்காக தெரியப்படுத்தி வருகின்றோம்.
வழக்குத் தாக்கல்
அதன் பின்னர், இது பொது மக்களின் திருவிழா என சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் குறித்த சில நபர்கள் இது தம்முடைய தனிப்பட்ட திருவிழாவென தற்போது வரைக்கும் விடாப்பிடியாக நிற்கின்றனர்.
அத்துடன் திருவிழா தொடர்பாக பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆகவே இது பொது மக்களுக்கு உரிய திருவிழா, அதனை எல்லோரும் சேர்ந்து நடாத்த வேண்டும் என்பதே எமது விருப்பம் - என்றனர்.