பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்
பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளைத் தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஆரோக்கியமான விலங்குகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் நோய் பரவல் ஓரளவு குறையும் எனவும் அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல (Dr. Hemali Kothalawala) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வர்த்தமானி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை செல்லுபடியாகும். புதிய வர்த்தமானியானது கால்நடை மருத்துவரின் விலங்கு சுகாதார அறிக்கையின் அடிப்படையில் ஆரோக்கியமான பண்ணைகளிலிருந்து நோய்த்தொற்று இல்லாத விலங்குகளைக் கொண்டு செல்வதைச் சாத்தியமாக்குகிறது.
கால்நடை உற்பத்தி
மேலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே அந்த விலங்குகளை வெட்ட முடியும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி சான்றளித்து அதற்கான பதிவை வழங்குவார்.
அதன்படி, இறைச்சியைச் சேமித்து வைக்கும் இறைச்சி கூடங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து வெளியேறும் இறைச்சியைப் பதப்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.
தயாரிக்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யவும், உணவகங்களில் நோய்த் தொற்று இல்லாத விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்யவும் இந்த வர்த்தமானியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |