பல்கலைக்கழக மாணவர்களிடம் புதிய உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கான வளங்களை கோரி ஆர்ப்பாட்டம் செய்வதை விட ஏனைய விடயங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்வது அதிகமாக உள்ளதாக புதிய உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - 07 வோர்ட் பிளேஸிலுள்ள உயர்கல்வி அமைச்சில் நேற்று இராஜாங்க அமைச்சு பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதுள்ள வாழ்க்கைச் செலவு தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளனர். ஆகவே மகாபொல புலமை பரிசிலின் அளவு மற்றும் செயன்முறைகள் தொடர்பில் மீண்டும் மீளச் சிந்திக்க வேண்டும்.
கட்டமைப்பு மாற்றம்
மகாபொல மாத்திரமல்ல, பல்கலைக்கழகத்திற்குள் இருக்கும் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புபட்டிருக்கும் கொள்கை மற்றும் செயற்பாடு தொடர்பில் மீளச் சிந்திக்கும் காலம் வந்துள்ளது. அதுவே கட்டமைப்பு மாற்றம்.
கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்த உலகத்தில் எழுப்படும் குரலுக்கு செவிசாய்க்க வேண்டுமாயின், இந்தச் செயன்முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
அந்த நிறுவனங்களில் ஒன்றுதான் பல்கலைக்கழகத் துறை. ஆகவே பல்கலைக்கழகத் துறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என நான் தீர்க்கமாக நம்புகின்றேன். அது மக்களுக்கு பொறுப்புகூற வேண்டிய நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்.
குடிமக்களின் எதிர்காலத்திற்காகவும் குடிமக்கள் நம்பும் நிறுவனமாகவும் பல்கலைக்கழகம் மாற்றப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் துணை கலாசாரங்கள் காணப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் நான் நாட்டின் குடிமக்கள் என்றே குறிப்பிடுவேன். 18 வயதை நிறைவுசெய்த பின்னரே அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருகின்றனர்.
பல்கலைக்கழக சமநிலை
18 வயதை பூர்த்தி செய்த பின்னர் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை தேர்தல் ஊடாக மாற்றும் வாய்ப்பு அரசியலமைப்பின் பிரகாரம் அவர்களுக்கு கிடைக்கின்றது. அவர்கள் முழுமையான குடிமக்கள். பூரண குடிமக்கள் என்ற வகையில் தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு முழுமையான உரிமை உள்ளது.
எனினும் அதனை பேசும் விதம், நடைமுறையில் உள்ள சட்டத்துடன் முரண்பாடுமாயின், அது சட்டப் பிரச்சினையாகும். அது பல்கலைக்கழக சட்டம் தொடர்பான பிரச்சினையில்லை.
பல்கலைக்கழகத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் அல்லது ஒரு தரப்பினர் பல்கலைக்கழகங்களுக்கு சிறந்த புத்தகங்களை பெற்றுத் தருமாறும், உலகிலுள்ள சிறந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை அழைத்து போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,வெளிநாடுகளில் உள்ள கல்வியலாளர்களை பல்கலைகழகங்களுடன் தொடர்புபடுத்தி தாருங்கள் என கோரி, பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினால் சிறந்தது.
ஏனைய விடயங்களை கோருவதைப் போன்று அதனையும் கோரினால் பல்கலைக்கழகத்தில் ஒரு சமநிலை ஏற்படும்” என்றார்.

